இலங்கையின் முதலாவது பலசரக்கு தொடர்பான உத்தியோகபூர்வ இணையத்தளமாக www.spicelk.com என்ற இணையத்தளத்தை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன அவர்களின் தலைமையில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் பலசரக்கு மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தல் சபையினால், இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பலசரக்கு உற்பத்தியாளர்களின் தரமான தயாரிப்புகளை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன அவர்கள், “பலசரக்கு மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களை சந்தைப்படுத்தல் சபை நிறுவப்பட்டு 1½ வருட குறுகிய காலத்தினுள் உள்நாட்டு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான உற்பத்தியாளர்களின் பலசரக்குகள் வெளிநாட்டுச் சந்தைகளுக்கு அனுப்புகின்ற ஆரம்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் இந்த சந்தர்ப்பத்தில், இணையத்தளத்தை ஆரம்பிப்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அத்தோடு, தற்போது ஒரு சில அரச நிறுவனங்கள் நஷ்டத்தால் மூடப்பட்டு வரும் வேளையில், ஒரு அரச நிறுவனம் என்ற வகையில், சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களினது வருமானம் ஈட்டும் வாய்ப்பு வழங்கப்படுவதும் பாராட்டத்தக்கது.

சீனா போன்ற நாடுகளில் பலசரக்குப் பொருட்களுக்கு பாரிய சந்தை நிலவுவதாகவும், அவ்வாறான சந்தைகளுக்குள் பிரவேசிப்பதன் மூலம் உள்ளூர் சிறு மற்றும் நடுத்தர அளவிலான பலசரக்கு உற்பத்தியாளர்களைப் போன்றே விவசாயிகளுக்கும் இது முக்கியமானதாக அமையும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் உள்நாட்டு பலசரக்குகள் பற்றிய தகவல்களைப் போன்றே பலசரக்குகளுடன் தொடர்புடைய உற்பத்திகளை சந்தைப்படுத்தல் சபையின் மூலம் செயற்படுத்தப்பட்டு வரும் 24 விற்பனை நிலையங்கள் பற்றிய தகவல்கள் இந்த இணையத்தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. மேலும் இணைய வழி முறை ஊடாக (Oonline) இலங்கையின் எந்த இடத்துக்கும் பலசரக்குப் பொருட்களை விநியோகிப்பதற்கான திறனையும் இது வழங்குகிறது மற்றும் இலங்கை தபால் திணைக்களத்தினால் இந்த பலசரக்குப் பொருட்கள் வாடிக்கையாளர்களின் கைகளுக்கு விரைவாக வழங்கப்படும். எதிர்காலத்தில், இந்த இணையவழி முறை மூலம் வெளிநாட்டு வாடிக்கையாளர்களும் இந்த பலசரக்குப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை பெறும்வகையில் பலசரக்கு மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் சபையினால் திட்டமிட்டுள்ளது.

இந்நிகழ்வில் பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்தி, பலசரக்கு மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்திப் பொருட்கள் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் குமுதுனி குணசேகர, பலசரக்கு மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்திப் பொருட்கள் சந்தைப்படுத்தல் சபையின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் மகேஷ் குணரத்ன, இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைவர் வைத்தியர் சாரங்க அழகப்பெரும மற்றும் பலர் கலந்துகொண்டனர்.