A12 8 A12 6
A12 3 A12 4
A12 7 A12 5
A12 2 A12 1

2023 ஆம் ஆண்டிற்கான கடமை நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்கும் விழாவை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் ஊழியர் குழாத்தினரால் 2023.01.02 ஆந் திகதியன்று செத்சிரிபாயவில் அமைந்துள்ள பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் வளாகத்தில் நடாத்தப்பட்டது. அங்கு 2023 ஆம் ஆண்டிற்கான அரச ஊழியர் உறுதிமொழி வழங்கப்பட்டதுடன், அந்நிகழ்வில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண, அரச பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்தி, மேலதிக செயலாளர்கள், மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட ஒட்டுமொத்த ஊழியர்களும் கலந்துகொண்டனர்.


இங்கு உரையாற்றிய பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன அவர்கள், 2019 ஆம் ஆண்டில் 3.1 பில்லியன் டொலர்களாக இருந்த பெருந்தோட்டக் கைத்தொழில் துறையின் ஏற்றுமதி வருமானம் 2021 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 3.8 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும், 2022 ஆம் ஆண்டில் அதனை விடக் குறைவாகக் காணப்பட்டதாகவும், 2013 ஆம் ஆண்டில் அது 4 பில்லியன் டொலர்கள் வரை அதிகரித்ததாகவும் அதனை 2025 ஆம் ஆண்டளவில் 5 பில்லியன் டொலர்கள் வரைக் கொண்டு செல்வதே பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் இலக்காகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 2022 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட பசளைத் தட்டுப்பாடு உள்ளிட்ட பிற பொருளாதார நெருக்கடிகள், ரஷ்ய உக்ரைன் போரினால் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி ஆகியன எமது நாட்டு பெருந்தோட்டத் துறை ஏற்றுமதி வருமானம் குறைவடைவதற்கு வழிவகுத்த அடிப்படைக் காரணங்கள் என எடுத்துக் காட்டினார். உலக தேயிலை வர்த்தகத்தின் வருமானம் 2022 ஆம் ஆண்டில் 7.7 பில்லியன் டொலர்களாக இருந்தது, இது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அதிக முன்னேற்றத்தைக் காட்டவில்லை, மேலும் கோப்பி அடிப்படையிலான மொத்த வருமானம் 35 இலிருந்து 42 பில்லியன் டொலர்கள் வரை உயர்ந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்வகையில், பெருந்தோட்டத் தொழிற்துறையில் குறிப்பிட்ட ஒரு சில பொருட்களுடன் சுருங்குவதால் உலக சந்தையில் எமது உற்பத்திகளுக்கு பெறுமதி சேர்ப்புச் செயற்பாடுகளுடன் முன்கொண்டு செல்ல வேண்டிய சவாலையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கடந்த இக்கட்டான காலப்பகுதியில் பல சவால்களுக்கு மத்தியில் பெருந்தோட்டக் கைத்தொழிலைப் பாதுகாப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளுக்காக அமைச்சின் அனைத்து ஊழியர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.


இந்நிகழ்வில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அவர்கள், நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதில் முன்னனி வகிக்கும் ஒரு துறையாக காணப்படும் பெருந்தோட்டக் கைத்தொழிற் துறையின் முன்னேற்றத்திற்காக இந்த வருடம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டிற்காக உழைக்க வேண்டும் என்றார்.


இங்கு, அமைச்சின் செயலாளர் திரு. ஜனக தர்ம கீர்த்தி அவர்கள், கடந்த வருடம் எதிர்கொண்ட சவால்களைப் போன்றே எதிர்காலத்தில் திட்டங்களை செயற்படுத்த வேண்டிய விதம் குறித்தும் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு விளக்கமளித்தார்.