பனை அபிவிருத்தி சபையினால் யாழ்ப்பாணத்தில் உள்ள பனை ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடத்தின் திறப்பு விழா அண்மையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் திரு. லொஹான் ரத்வத்த அவர்களின் பங்கேற்புடன் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன அவர்களின்  தலைமையில்  இடம்பெற்றது. .


அங்கு உரையாற்றிய அமைச்சர் ரமேஷ் பத்திரன, வடமாகாணத்தின் பாரம்பரிய தொழிலான பனை கைத்தொழிலை வர்த்தக மட்டத்தை  நோக்கிக் கொண்டு செல்வதற்காக  பனை அபிவிருத்தி சபையும் பனை ஆராய்ச்சி நிறுவனமும் பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக தெரிவித்தார். அவ்வாறே பல்வேறு பனை தொடர்பான பொருட்கள் மற்றும் பனை தொடர்பான மதுபான தொழில்துறையில் கவனம் செலுத்த தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மேலும், பனை கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள 12000க்கும் மேற்பட்ட மக்களின் பிள்ளைகளுக்கு பனை கைத்தொழிலை ஊக்குவிப்பதன் மூலம் ஏற்படும் பொருளாதார நலன்களுக்காக பனை அபிவிருத்தி சபையின் ஊடாக கல்வி புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் குறிப்பிட்டார். இறுதியாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் இவ்வாறு கூறினார்.


"நாங்கள் ஒரே நாட்டில் வாழும் சகோதர மக்கள். எங்களுக்கு வடக்கு, தெற்கு என்ற வித்தியாசம் இல்லை. எனவே, அரசாங்கம் என்ற வகையில் வடக்கு மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக சகலதையும் செய்வதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அதற்காக எல்லாவற்றையும் செய்தும் வருகிறோம்” என்றார்.


இந்நிகழ்வில் பெருந்தோட்ட அமைச்சின் உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், பனை அபிவிருத்தி சபை மற்றும் பனை ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள்,  வடமாகாண அரசியல் அதிகார சபை மற்றும் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.